79

1. மூலிகையின் பெயர் -: பூனைக்காலி

2. தாவரப் பெயர் -: MUCUNA PRURIENS.

3. தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.

4. வகைகள் -: இது கொடி வகையைச் சேர்ந்தது, இதில் கருமை, வெண்மை என இரு வகையுண்டு. சிறு பூனைக்காலியும் உண்டு.

5.பயன் தரும் பாகங்கள் -: விதை, வேர், சுனை முதலியன.

6. வளரியல்பு -: பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்காவும் இந்தியாவும். இதற்கு கரிசல் மண் மற்றும் செம்மண்ணும் ஏற்றது. இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது உடம்பில் பட்டால் நமச்சல் ஏற்படும். இது விதை மூலம் இன விருத்திசெய்யப் படுகிறது.

7. மருத்துவப்பயன்கள் -: பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது.

பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்து சூரணம் செய்து கொண்டு ஐநூறு மி.கிராம் ஆயிரம் மி.கிராம் அளவு வரை திணந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.

பூனைக் காலி விதை, சுக்கு, திப்பிலி மூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவைகளை குறிப்பிட்ட அளவு எடுத்து சூரணம் செய்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் காலை, மாலை இரு வேளை ஒருமாத்திரை வீதம் உண்டு வர வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடல் வன்மை குறைந்தவர்கள் பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வரை கால், மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

ஒரு லிட்டர் பசும் பாலில் முந்நாற்று இருபது கிராம் பூனைக் காலி விதையைப் போட்டு, பால் வற்றும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். விதையை எடுத்து நன்கு உலர வைத்துப் பொடி செய்து கொண்டு, தேவையான அளவு நெய் விட்டு இளவருப்பாக வறுத்து, சீனிப்பாகு இரண்டு பங்கு கலந்து நன்கு கிளறி சுண்டைக்காய் அளவு உருட்டி தேனில் ஊறவைக்க வேண்டும். காலை, மாலை இரு வேளை ஒரு உரண்டை வீதம் வெள்ளை, வெட்டை, பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் அதிகமாகப் பெருகுதல் முதலியவைகளிக்கு கொடுத்து வர, இவை குணமாகும்.

பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாக க்கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்.

பூனைக்காலி விதை நீக்கிய ஓட்டை சுனையுடன் தேனில் நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து அதன் சுனையை மெதுவாகச் சுரண்டி தேனுடன் நன்கு குழகுழப்பு பதம் வரும் வரை கல்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை தினந்தோறும் காலையில் சிறுவர்களுக்கு ஒரு மேஜைக்கரண்டியும், பெரியவர்களிக்கு இரண்டு மேஜைக் கரண்டியும் நான்கு நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர, கழிசல் உண்டாக்கி, வயிற்றிலுள்ள புழுக்களும் சாகும்.பூனைக்காலி காயை இதன் விதைகளை நீக்கி விட்டு நன்றாக உலர்த்தி, இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதனை முறைப்படி கஷாயம் இட்டு, வடிகட்டிக் கொண்டு அதில் சிறிது காட்டத்திப்பூ சேர்த்து நாற்பது நாட்கள் வரை மண்ணில் புதைத்து வைத்து, தக்க அளவு எடுத்து அருந்தி வர, ரத்தசோகை நோய் குணமாகும். கை கால் வீக்கமும் வடியும்.

பூனைக்காலி வேரை முறைப்படி கஷாயமிட்டு முப்பது மி.லி.முதல் அறுபது மி.லி. வீதம் கலந்து அருந்தி வர ஊழி நோய், சுரம் முதலியவைகளில் காணப்படும் வாதம், பித்தம், கப நோய் நீங்கும்.

பூனைக்காலி வேரை அரைத்து யானைக்கால் நோயால் ஏற்பட்ட வீக்கத்திற்கும் இதர வீக்கங்களிக்கும் பற்றிடலாம்.

பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது பல சூரணங்களிலும் லேகியங்களிலும் சேர்க்கப்படுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book