50

புங்கமரம்.

1) மூலிகையின் பெயர் -: புங்கமரம்.

2) தாவரப்பெயர் -: PONGAMIA PINNATA.

3) தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.

4) வேறுபெயர்கள் -: கரஞ்சம், கரஞ்சகம், புங்கு (புன்கு)

5) பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, விதைகள், வேர் மற்றும் எண்ணெய்.

6) வளரியல்பு -: புங்கமரம் இந்தியாவில் சாதாரணமாக எங்கும் காணக் கூடிய மரம். இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. சுமார் 18 மீ. உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும். சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும். நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும். இது கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளர்கிறது. கிராமங்களில் வீட்டின் முன்பு வேம்பு அல்லது புங்கன்மரம் இருப்பதை பார்க்கலாம். இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை அனுப்புகின்றன. சாலையோரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. இனப்பெருக்கம் செய்ய நன்றாக முற்றிய காய்ந்த விதைகளின் கடினமான மேலோட்டை நீக்க ஊரவைத்தும் அதன் பருப்பை விதைத்தும், கட்டிங் மூலமும் நாற்றை உற்பத்தி செய்வார்கள்.

7) மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.

புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.

புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.

புங்கன் இலையை ஆரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.

புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.

நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

புங்கிலிருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.

புங்கன் புளி,மா,வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 2 முடக்கு வீதம் குடித்து வர மாந்தம், உள் சூடு, பித்த சுரம் ஆகியவை போகும். குழந்தைகளுக்கு 30 மி.லி. வீதம் தினம் 1 வேளைகொடுக்கலாம்.

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மது மேகம் மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு, வகைக்கு 50 கிராம் இடித்து 1 லிட்டர் பசும்பாலில் அரைத்துக் கலக்கி 1 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடிகட்டி அரை முதல் 1 தேக்கரண்டி வரை காலை மட்டும் 1 மண்டலம் கொள்ள சகலக் கரப்பானும், தோல் நோயும் தீரும்.

புங்க வேர், சிற்றாமணுக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம் பூண்டுச்சாறு அரை லிட்டர், விளக்கெண்ணெய் 2 லிட்டர் கடுகு ரோகினி 10 கிராம் வாதரசு(வாதமடக்கி) வேர்ப் பட்டை 20 கிராம் இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் காலை மட்டும் 1 தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகளும் தீரும்.

தற்பொழுது புங்கன் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிறிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். 12-08-2008 அன்று ஐ.எப்.ஜி.டி.பி மூலம் நானும் சத்தி பன்னாரியம்மன் சக்கரை ஆலை வழாகத்தில் அமைந்துள்ள புங்கன் விதையிலுருந்து பயோடீசல் எடுக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். புகைப்படம் இணைப்பு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book