94

1. மூலிகையின் பெயர் :- நல்ல வேளை

2. தாவரப்பெயர் :- GYNANDROPSIS PENTAPHYLLA.

3. தாவரக்குடும்பம் :- CAPPARIDACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பூ மற்றும் விதைகள்.

5. வேறு பெயர் :- தை வேளை.

6. வளரியல்பு :- நல்ல வேளைச் செடி மழை காலங்களில் தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் வளர்கிறது. ஆப்பிரிக்கா, காங்கோவில் அதிகம் காணப்படும். ஒன்றாகக் குத்துக் குத்தாக வளரும். நீண்ட காம்புடன் விரல்களைப் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்து மலர்களையும் உடைய சிறுஞ்செடி. இதன் விதைகளைக் கடுகுக்குப் பதிலாக பயன் படுத்துகிறார்கள். எண்ணையும் எடுக்கிறார்கள். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் :- இலை நீர்கோவை நீக்கும் மருந்தாகவும், பூ கோழையகற்றிப் பசியுண்டாக்கவும், விதை இசிவு அகற்றியாகவும், வயிற்றுப் புழுக்கொல்லியாகவும், குடல் வாயுவகற்றியாகவும் பயன் படும்.

சமூலத்தை இடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக் கட்டியெடுக்க நீர்க்கோவை, தலைப்பாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும்.

இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம் சீதளச் சுரம் ஆகியவை தீரும்.

நல்ல வேளை இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.

நல்ல வேளை இலையை அரைத்துப் பற்றுப் போடச் சீழ் பிடித்துக் கட்டிகள் உடைந்து ஆறும்.

பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழைந்தைகளுக்குக் கொடுக்கக் கபம்,
கணமாந்தம் சளி நிறைந்து மூச்சுத்திணறல், சுரம், நீர்கோவை ஆகியவை தீரும்.

விதையை நெய்விட்டு வறுத்து பொடித்து சிறுவர்க்கு அரை கிராம், பெரியவர்க்கு 4 கிராம் வீதம் காலை மாலையாக மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் (விளக்கெண்ணையில்) பேதிக்குக் கொடுக்கக் குடலிலுள்ள தட்டைப்புழுக்கள் கழியும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book